< யாத்திராகமம் 17 >

1 பின்பு இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் யெகோவாவுடைய கட்டளையின்படி சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு, பயணம்செய்து, ரெவிதீமிலே வந்து முகாமிட்டார்கள்; அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, யெகோவாவின் கட்டளைப்படி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்தார்கள். பின்பு ரெவிதீம் என்னும் இடத்திற்கு வந்து அங்கே முகாமிட்டார்கள். அங்கே அவர்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.
2 அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: “நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும்” என்றார்கள். அதற்கு மோசே: “என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், யெகோவாவை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்” என்றான்.
அதனால் இஸ்ரயேலர் மோசேயுடன் வாக்குவாதம் செய்து, “குடிப்பதற்கு எங்களுக்குத் தண்ணீர் தாரும்” என்றார்கள். அப்பொழுது மோசே அவர்களிடம், “என்னோடு ஏன் வாக்குவாதம் செய்கிறீர்கள்? யெகோவாவை ஏன் சோதிக்கிறீர்கள்?” என்றான்.
3 மக்கள் அந்த இடத்தில் தண்ணீர்த் தாகமாக இருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: “நீர் எங்களையும் எங்களுடைய பிள்ளைகளையும் எங்களுடைய ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தாகத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர்” என்றார்கள்.
ஆனால் மக்கள் மிகவும் தாகமாயிருந்ததினால் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அவர்கள் அவனிடம், “எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் வளர்ப்பு மிருகங்களையும் தாகத்தினால் சாகும்படி, ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர்?” என்று கேட்டார்கள்.
4 மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: “இந்த மக்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே” என்றான்.
அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்கு என்ன செய்வேன்? அவர்கள் என்னைக் கல்லெறிய ஆயத்தமாயிருக்கிறார்களே” என்றான்.
5 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மூப்பர்களில் சிலரை உன்னோடு கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன்னுடைய கோலை உன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோ.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இஸ்ரயேலின் சபைத்தலைவர்களில் சிலரை உன்னுடன் கூட்டிக்கொண்டு மக்களுக்கு முன்பாக நட. நீ நைல் நதியை அடித்த கோலை கையில் எடுத்துக்கொண்டு போ.
6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பர்களின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் அருகே உனக்கு முன்பாக அங்கே நிற்பேன். நீ கற்பாறையை அடி. அப்பொழுது மக்கள் குடிப்பதற்கு அதிலிருந்து தண்ணீர் வெளிவரும்” என்றார். மோசே அவ்விதமே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் முன்னிலையில் செய்தான்.
7 இஸ்ரவேலர்கள் வாதாடினதற்காகவும், “யெகோவா எங்களுடைய நடுவில் இருக்கிறாரா இல்லையா” என்று அவர்கள் யெகோவாவை சோதித்துப் பார்த்ததினாலும், அவன் அந்த இடத்திற்கு மாசா என்றும், மேரிபா என்றும் பெயரிட்டான்.
இஸ்ரயேலர்கள், “யெகோவா எங்களுடன் இருக்கிறாரா? இல்லையா?” என்று கேட்டு யெகோவாவைப் சோதித்தபடியால் அந்த இடத்திற்கு மாசா என்றும், அவர்கள் வாதாடினபடியால் மேரிபா என்றும் மோசே பெயரிட்டான்.
8 அமலேக்கியர்கள் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள்.
அதன்பின் அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரயேலரைத் தாக்கினார்கள்.
9 அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: “நீ நமக்காக மனிதர்களைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்; நாளைக்கு நான் மலைமேல் தேவனுடைய கோலை என்னுடைய கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன்” என்றான்.
அப்பொழுது மோசே யோசுவாவிடம், “எங்கள் மனிதரில் சிலரைத் தெரிந்துகொண்டு அமலேக்கியரோடு சண்டை செய்ய வெளியே போ. நான் நாளை என் கையில் இறைவனின் கோலைப் பிடித்துக்கொண்டு மலையுச்சியில் நிற்பேன்” என்றான்.
10 ௧0 யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்தான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலைமேல் ஏறினார்கள்.
மோசே உத்தரவிட்டபடியே யோசுவா அமலேக்கியருடன் போரிட்டான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலையுச்சிக்குப் போனார்கள்.
11 ௧௧ மோசே தன்னுடைய கையை மேலே பிடித்திருக்கும்போது, இஸ்ரவேலர்கள் வெற்றிபெற்றார்கள்; அவன் தன்னுடைய கையைகீழே விடும்போது, அமலேக்கு வெற்றிபெற்றான்.
மோசே தன் கைகளை உயர்த்திக்கொண்டிருக்கும்வரை, இஸ்ரயேலர் வென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே தன் கைகளைக் கீழே விடும்பொழுதோ, அமலேக்கியர் வெல்லத்தொடங்கினார்கள்.
12 ௧௨ மோசேயின் கைகள் சோர்ந்துபோனது, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும், ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறுபக்கத்திலும் இருந்து, அவனுடைய கைகளைத் தாங்கினார்கள்; இந்த விதமாக அவனுடைய கைகள் சூரியன் மறையும்வரையும் ஒரே நிலையாக இருந்தது.
மோசேயின் கைகள் தளர்ந்துபோயின. அப்போது ஆரோனும், ஊரும் ஒரு கல்லை எடுத்து அவனுக்குக் கீழே வைத்தார்கள். அவன் அதன்மேல் உட்கார்ந்தான். ஆரோனும், ஊரும் ஒரு பக்கம் ஒருவனும், மறுபக்கம் மற்றவனுமாக அவனுடைய கைகளை உயர்த்தித் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள். அதனால் சூரியன் மறையும்வரை அவன் கைகள் உறுதியாயிருந்தன.
13 ௧௩ யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் கூர்மையான பட்டயத்தாலே தோற்கடித்தான்.
எனவே யோசுவா வாளினால் அமலேக்கியப் படையை மேற்கொண்டான்.
14 ௧௪ பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழே எங்கும் இல்லாதபடி நாசம் செய்வேன்” என்றார்.
அதன்பின் யெகோவா மோசேயிடம், “இன்று நடந்தது நினைவிற்கொள்வதற்காக இதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, அதை யோசுவா கேட்கும்படி சொல். ஏனெனில், நான் வானத்தின் கீழிருந்து அமலேக்கியரைப் பற்றிய நினைவையே இல்லாது போகும்படி அழித்துவிடுவேன் என்று சொல்” என்றார்.
15 ௧௫ மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டு,
மோசே அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி அவ்விடத்திற்கு யெகோவா என் வெற்றிக்கொடி என்று பெயரிட்டான்.
16 ௧௬ “அமலேக்கின் கை யெகோவாவுடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாக யெகோவாவின் யுத்தம் நடக்கும்” என்றான்.
பின்பு மோசே, “யெகோவாவினுடைய அரியணைக்கு விரோதமாக அமலேக்கின் கரங்கள் உயர்த்தப்பட்டிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் யெகோவா அமலேக்கியருக்கு எதிராக யுத்தம் செய்வார்” என்றான்.

< யாத்திராகமம் 17 >