< ஏசாயா 3 >

1 இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்;
இப்பொழுது பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும் எல்லா ஆதரவையும் உதவியையும் நிறுத்தப் போகிறார்: உணவு வழங்குவதையும், தண்ணீர் வழங்குவதையும் நிறுத்தப் போகிறார்.
2 பராக்கிரமசாலியையும், போர்வீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், ஞானியையும், மூப்பனையும்;
மாவீரனையும், போர்வீரனையும், நீதிபதியையும், இறைவாக்கினனையும், குறிசொல்பவனையும், சபைத்தலைவனையும்,
3 ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும், தொழிலில் சாமர்த்தியமுள்ளவனையும், மாயவித்தையில் கெட்டிக்காரனையும் அகற்றப்போகிறார்.
4 வாலிபர்களை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
“நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்; விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆட்சிசெய்வார்கள்.”
5 மக்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடையூறு செய்வான்.
மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்: ஒருவருக்கொருவரும், அயலானுக்கு விரோதமாக அயலானும், இளையோர் முதியோருக்கு விரோதமாகவும், கீழோர் மேலோருக்கு விரோதமாகவும் எழும்புவார்கள்.
6 அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டைச்சேர்ந்த தன் சகோதரனைப்பிடித்து: உனக்கு மேலாடை இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டிற்கு இணையான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;
ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து, “உன்னிடம் மேலுடை இருக்கிறது; நீயே எங்களுக்குத் தலைவனாயிரு. பாழடைந்த இவ்விடத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும்” என்று சொல்வான்.
7 அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாக இருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை ஆடையுமில்லை; என்னை மக்களுக்கு அதிபதியாக ஏற்படுத்தவேண்டாம் என்பான்.
ஆனால் அவனோ அந்நாளில், “என் வீட்டில் உணவோ, உடையோ கிடையாது; இதற்கு எந்தவிதத் தீர்வும் என்னிடம் இல்லை. என்னை மக்களுக்குத் தலைவனாக்காதே” என்று மறுத்துவிடுவான்.
8 ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோனது; அவர்களுடைய நாவும், அவர்கள் செயல்களும், யெகோவாவுடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.
எருசலேம் நகரம் தள்ளாடுகிறது, யூதா நாடு வீழ்ச்சியடைகிறது; அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது, அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள்.
9 அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்களுடைய ஆத்துமாவுக்கு ஐயோ, தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்கிறார்கள்.
அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது; சோதோம் நகரத்தைப்போல தங்கள் பாவங்களைப் பறைசாற்றுகிறார்கள். அவைகளை மறைத்து வைக்கவில்லை. ஐயோ! அவர்களுக்குக் கேடு; அவர்கள் தங்களுக்குத் தாங்களே பேராபத்தை வருவித்துக் கொண்டார்கள்.
10 ௧0 உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.
நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்; ஏனெனில் அவர்கள், தமது செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.
11 ௧௧ துன்மார்க்கனுக்கு ஐயோ, அவனுக்குக் கேடு உண்டாகும்; அவனுடைய கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
கொடியவர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்களின் கைகளின் செயல்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்குச் செய்யப்படும்.
12 ௧௨ பிள்ளைகள் என் மக்களை ஒடுக்குகிறவர்களாக இருக்கிறார்கள்; பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். என் மக்களோ, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.
வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள், பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். எனது மக்களே, உங்கள் வழிகாட்டிகள் உங்களைத் தவறான வழியில் நடத்துகிறார்கள்; அவர்கள் உங்களை வழிவிலகிப்போகச் செய்கிறார்கள்.
13 ௧௩ யெகோவா வழக்காட எழுந்திருந்து, மக்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
யெகோவா வழக்காட ஆயத்தமாகி, மக்களை நியாயந்தீர்க்க எழுந்து நிற்கிறார்.
14 ௧௪ யெகோவா தமது மக்களின் மூப்பர்களையும், அவர்களுடைய பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சைத்தோட்டத்தை அழித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.
யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும் விரோதமாய் நியாயத்தீர்ப்பு செய்கிறார். “என் திராட்சைத் தோட்டத்தைப் பாழாக்கியவர்கள் நீங்களே; எளியவர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்கள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.
15 ௧௫ நீங்கள் என் மக்களை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறார்.
நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன? ஏழைகளின் முகத்தை உருக்குலைப்பதின் பொருள் என்ன?” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
16 ௧௬ பின்னும் யெகோவா சொல்கிறதாவது: சீயோனின் பெண்கள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் கவர்ச்சியாகப்பார்த்து, ஒய்யாரமாக நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
மேலும் யெகோவா சொன்னதாவது: “சீயோனின் பெண்களோ கர்வம் கொண்டிருக்கிறார்கள்; தங்கள் கழுத்தை வளைக்காது அகங்காரமாய் நடக்கிறார்கள், அவர்கள் தங்கள் கண்களினால் மருட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்க ஒய்யாரமாய் நடந்து திரிகிறார்கள்.
17 ௧௭ ஆதலால் ஆண்டவர் சீயோன் பெண்களின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; யெகோவா அவர்கள் மானத்தைக் குலைப்பார்.
ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்; அவர்களின் தலைகளை யெகோவா வழுக்கையாக்குவார்.”
18 ௧௮ அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைவடிவ கழுத்தணிகளையும்,
அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள்,
19 ௧௯ ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும்,
காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள்
20 ௨0 தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள்,
21 ௨௧ தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
மோதிரங்கள், மூக்குத்திகள்;
22 ௨௨ விநோத உடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள்,
23 ௨௩ கண்ணாடிகளையும், மெல்லிய ஆடைகளையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் கழற்றிப்போடுவார்.
கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார்.
24 ௨௪ அப்பொழுது, சுகந்தத்திற்குப் பதிலாகத் துர்க்கந்தமும், கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான உடைகளுக்குப் பதிலாக சணல்உடையும், அழகுக்குப் பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.
அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்; ஒட்டியாணம் இருக்கும் இடத்தில் கயிறு கட்டப்படும். அழகாய் முடிக்கப்பட்ட கூந்தல் இல்லாதுபோய், அது வழுக்கைத் தலையாய் இருக்கும்; அலங்கார உடைக்குப் பதிலாக அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொள்வார்கள்; அழகுக்குப் பதிலாக அடிமைகளின் நெருப்புச்சூட்டுத் தழும்பு அவர்களுக்கு இருக்கும்.
25 ௨௫ உன் கணவன் பட்டயத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.
உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்; உங்களின் இராணுவவீரர் போர்க்களத்தில் சாவார்கள்.
26 ௨௬ அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.
சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்; அவள் ஆதரவற்றவளாகத் தரையில் உட்காருவாள் என்கிறார்.

< ஏசாயா 3 >